நற்றிணை - 261. குறிஞ்சி

அருளிலர்வாழி- தோழி!- மின்னு வசிபு இருள் தூங்கு விசும்பின் அதிரும் ஏறொடு வெஞ் சுடர் கரந்த கமஞ் சூல் வானம், நெடும் பல் குன்றத்துக் குறும் பல மறுகி, தா இல் பெரும் பெயல் தலைஇய யாமத்து, |
5 |
களிறு அகப்படுத்த பெருஞ் சின மாசுணம் வெளிறு இல் காழ் மரம் பிணித்து நனி மிளிர்க்கும் சாந்தம் போகிய தேம் கமழ் விடர் முகை, எருவை நறும் பூ நீடிய பெரு வரைச் சிறு நெறி வருதலானே. |
10 |
தோழீ! நீ நெடுங்காலம் வாழ்வாயாக!; மின்னல் பிளந்து எழுந்து இருள் நிறைந்த ஆகாயத்தில் அதிர்கின்ற இடிமுழக்கத்துடனே; வெய்ய ஆதித்தன் வெளியிலே தோன்றாதபடி மறையச் செய்த நிறைந்த சூலையுடைய மேகம்; நெடிய பெரிய மலையிடத்துச் சிறிய பலவாக இயங்கி; வருத்தமில்லாத பெரிய மழையைப் பெய்துவிட்ட நடுயாமத்திலே; களிற்றியானைபைப் பற்றிச் சுற்றிக்கொண்ட பெரிய சினத்தையுடைய பெரும்பாம்பு; வெண்மையில்லாது முற்றிய வயிரம் பொருந்திய மரத்துடனே சேரப்பிணித்து மிகப் புரட்டாநிற்கும்; சந்தன மரத்தினின்றும் போந்த நறுமணங் கமழ்கின்ற மலைப் பிளப்பினையுடைய துறுகல்லின் அயலிலே; கொறுக்கச்சியின் நல்ல பூ நீடி மலர்ந்த; பெரிய மலையின்கணுள்ள சிறிய நெறியில் வருதலான்; நம் தலைவர்தாம் நம்பாற் சிறிதும் அருள் உடையார் அல்லர்; இனி அங்ஙனம் வாராதிருக்குமாறு கூறாய்;
சிறைப்புறமாகத் தோழி இரவுக்குறி விலக்கி வரைவு கடாயது;தலைமகள் இயற்பட மொழிந்ததூஉம் ஆம். - சேந்தன் பூதனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 261. குறிஞ்சி, பெரிய, இலக்கியங்கள், நற்றிணை, குறிஞ்சி, சிறிய, நிறைந்த, தோழி, சங்க, எட்டுத்தொகை, இருள்