நற்றிணை - 259. குறிஞ்சி

யாங்குச் செய்வாம்கொல்- தோழி!- பொன் வீ வேங்கை ஓங்கிய தேம் கமழ் சாரல், பெருங் கல் நாடனொடு இரும் புனத்து அல்கி, செவ் வாய்ப் பைங் கிளி ஓப்பி, அவ் வாய்ப் பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி, |
5 |
சாரல் ஆரம் வண்டு பட நீவி, பெரிது அமர்ந்து இயைந்த கேண்மை சிறு நனி அரிய போலக் காண்பேன்- விரி திரைக் கடல் பெயர்ந்தனைய ஆகி, புலர் பதம் கொண்டன ஏனற் குரலே? |
10 |
தோழீ! தினையின் கதிரெல்லாம் விரிந்த அலையையுடைய கடல்தான் வற்றினாற்போலக் காயும் பருவம் எய்தினகண்டாய்! இனி அவற்றை நமர் கொய்துகொண்டு போவதன்றி நின்னையும் இல்லின் கண்ணே செறிப்பது திண்ணம; பொன்போன்ற மலரையுடைய வேங்கைமரங்கள் உயர்ந்த மணங்கமழ்கின்ற சாரலின் கண்ணே; பெரிய மலைநாடனொடு கரிய தினைப்புனத்திலே தங்கிச் சிவந்த வாயையுடைய பசிய கிளியை ஓப்பி; அங்குள்ள கரிய பக்க மலையின்கணுள்ள அருவியில் நீர்விளையாட்டயர்ந்து; மலைச்சாரலி லெழுந்த சந்தனமரம் நறுமணங் கமழ்தலால் வண்டு வந்து விழும்படி அச் சந்தனத்தேய்வையைப் பூசி; பெரிதும் விரும்பி இயைந்த நட்பு மிகச் சிறுகி இனி அது தானும் இல்லையாகும் போல யான் காண்பேன்!; ஆதலால் நாம் என்ன செய்ய மாட்டுவேம்;
தோழி தலைமகளைச் செறிப்பு அறிவுறீஇ, வரைவு கடாயது. - கொற்றங் கொற்றனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 259. குறிஞ்சி, இலக்கியங்கள், நற்றிணை, குறிஞ்சி, இயைந்த, காண்பேன், கண்ணே, கரிய, வண்டு, சாரல், எட்டுத்தொகை, சங்க, தோழி, வாய்ப், ஓப்பி