நற்றிணை - 232. குறிஞ்சி

சிறு கண் யானைப் பெருங் கை ஈர்- இனம் குளவித் தண் கயம் குழையத் தீண்டி, சோலை வாழை முணைஇ, அயலது வேரல் வேலிச் சிறுகுடி அலற, செங் காற் பலவின் தீம் பழம் மிசையும் |
5 |
மா மலை நாட!- காமம் நல்கென வேண்டுதும்- வாழிய! எந்தை, வேங்கை வீ உக வரிந்த முன்றில், கல் கெழு பாக்கத்து அல்கினை செலினே. |
சிறிய கண்ணையும் பெரிய கையையுமுடைய யானையின் களிறும் பிடியுமாகிய இரண்டினம்; மலைப்பச்சையைச் சுற்றிலுமுடைய நீர்ச்சுனையிலே மெய் துவளப் புணர்ந்து சோலையிலுள்ள மலைவாழையைத் தின்பதை வெறுத்து; அயலிடத்துள்ளதாகிய மூங்கில் முள்ளான் மிடைந்த வேலியையுடைய சிறிய குடியின்கண்ணுள்ளார் அஞ்சியலறும்படி சிவந்த அடியையுடைய பலாவினது இனிய பழத்தைத் தின்னாநிற்கும் கரிய மலை நாடனே!; நீ நெடுங்காலம் வாழ்வாயாக!; எந்தைக்குரிய, வேங்கை மலர் உதிரும்படி அகன்ற வாயிலையுடைய ; மலையிலே பொருந்திய பாக்கத்து இன்று இராப் பொழுதையிலே தங்கினையாகிப் பிற்றைநாளிற் செல்வதாயின்; அதற்கு அடையாளமாக நினது மாலையைக் கொடுப்பாயாக! என வேண்டுகிற்போம்!
பகல் வருவானை இரவு வா எனத் தோழி சொல்லியது. - முதுவெங்கண்ணனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 232. குறிஞ்சி, இலக்கியங்கள், நற்றிணை, குறிஞ்சி, சிறிய, பாக்கத்து, சங்க, எட்டுத்தொகை, வேங்கை