நற்றிணை - 22. குறிஞ்சி

கொடிச்சி காக்கும் அடுக்கற் பைந்தினை முந்து விளை பெருங் குரல் கொண்ட மந்தி கல்லாக் கடுவனொடு நல் வரை ஏறி, அங்கை நிறைய ஞெமிடிக் கொண்டு, தன் திரை அணற் கொடுங் கவுள் நிறைய முக்கி, |
5 |
வான் பெயல் நனைந்த புறத்த, நோன்பியர் கை ஊண் இருக்கையின் தோன்றும் நாடன் வந்தனன்; வாழி- தோழி!- உலகம் கயம் கண் அற்ற பைது அறு காலை, பீளொடு திரங்கிய நெல்லிற்கு |
10 |
நள்ளென் யாமத்து மழை பொழிந்தாங்கே. |
தோழீ! மலைப்பக்கத்திற் கொடிச்சியாற் காக்கப்படும் பசிய தினைப்பயிரில்; முதலிலே பறிந்து முற்றிய பெருங் கதிர்களைக் கொய்துகொண்ட மந்தி; பாயுந் தொழிலன்றி¢ப் பிற கல்லாத கடுவனொடு நல்லவரை மீதேறி அகங்கை நிறையக் கயக்கித் தூய்மை செய்து; தன் திரைத்த அணலையுடைய வளைந்த கவுள் நிறைய வுண்டு; வம்பமாரி பெய்தலாலே நனைந்த புறத்தனவாய் நோன்புடையார் தைத்திங்கட் பிறப்பில் நீராடி நோன்பு முற்றியிருந்து உண்ணுதல் போலத் தோன்றா நிற்கும் மலைநாடன்; உலகத்துக் குளங்கள் எல்லாம் நீர் வற்றி ஈரமற்றகாலை; சூலொடு வாடிய நெற்பயிருக்கு நடுயாமத்து மழைபெய்தாற்போல; வந்தான்; இனி விரைவிலே வதுவை யயர்ந்து நெடுங்காலம் வாழக்கடவதாக!;
வரைவு மலிந்த தோழி, தலைமகட்குச் சொல்லியது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 22. குறிஞ்சி, இலக்கியங்கள், நிறைய, நற்றிணை, குறிஞ்சி, கவுள், நனைந்த, தோழி, பெருங், எட்டுத்தொகை, சங்க, மந்தி, கடுவனொடு