நற்றிணை - 163. நெய்தல்

உயிர்த்தனவாகுக, அளிய, நாளும்- அயிர்த் துகள் முகந்த ஆனா ஊதையொடு எல்லியும் இரவும் என்னாது, கல்லெனக் கறங்கு இசை இன மணி கைபுணர்ந்து ஒலிப்ப, நிலவுத் தவழ் மணற் கோடு ஏறிச் செலவர, |
5 |
இன்று என் நெஞ்சம் போல, தொன்று, நனி வருந்துமன்; அளிய தாமே: பெருங் கடல் நீல் நிறப் புன்னைத் தமி ஒண் கைதை, வானம் மூழ்கிய வயங்கு ஒளி நெடுஞ் சுடர்க் கதிர் காய்ந்து எழுந்து அகம் கனலி ஞாயிற்று |
10 |
வைகுறு வனப்பின், தோன்றும் கைதைஅம் கானல் துறைவன் மாவே! |
பெரிய கடலருகிலுள்ள கரிய நிறத்தையுடைய புன்னையின் பக்கத்தவாகிய தனிமையினிருக்கின்ற தாழையின் ஒள்ளிய மடல்; நெடிய சுடரையுடைய கதிரினாலே இருளைப்போக்கி யெழுந்து உள்ளே கொதித்து ஆகாயத்திலே சென்று விளங்கிய ஒளியையுடைய ஆதித்தனது பாடுசாய்கின்ற அலகுபோலத் தோன்றா நிற்கும்; அத்தகைய தாழஞ்சோலை சூழ்ந்த துறைவனுடைய குதிரைகள்; நாள்தோறும் நுண்மணலாகிய துகளை முகந்தெழுந்த அமையாது வீசும் ஊதைக்காற்றின் கண்ணே; இது பகலென்றும் இஃது இரவென்றும் கருதாமல் ஒலிக்கின்ற இனிய ஒலியையுடைய ஒரு நிகரவாகிய மணிகள்; ஒருசேரக் கோத்துக் கழுத்திலே பூட்டப்பட்டுக் கல்லென வொலிக்கும்படியாகத் தன் வெண்மை நிறத்தினால் நிலவு பரந்தாற்போன்ற மணற் குன்றுகளிலே ஏறிச் செல்லுதலானே; என்னெஞ்சம் இப்பொழுதுபோல முன்பே மிகவும் வருந்தியதாயிருந்தது; அந் நெஞ்சின் தன்மையைக் காணின் மிக இரங்கத் தக்கதாகும்; இன்று துறைவன் வரைவொடு புகுந்ததன் காரணமாக அவனுடைய குதிரைகள் தாம் இனி நாள்தோறும் வருந்துவனவல்ல; ஆதலின் இரங்கத் தக்கனவாகிய அவைகள் இப்பொழுது களைப்பாறுவனவாக !
வரைவு மலிந்து சொல்லியது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 163. நெய்தல், இலக்கியங்கள், நற்றிணை, நெய்தல், துறைவன், குதிரைகள், நாள்தோறும், இரங்கத், இன்று, மணற், எட்டுத்தொகை, சங்க, அளிய, ஏறிச்