நற்றிணை - 15. நெய்தல்

முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர், நுணங்கு துகில் நுடக்கம் போல, கணம் கொள ஊதை தூற்றும் உரவுநீர்ச் சேர்ப்ப! பூவின் அன்ன நலம் புதிது உண்டு, நீ புணர்ந்தனையேம் அன்மையின், யாமே |
5 |
நேர்புடை நெஞ்சம் தாங்கத் தாங்கி, மாசு இல் கற்பின் மடவோள் குழவி பேஎய் வாங்கக் கைவிட்டாங்கு, சேணும் எம்மொடு வந்த நாணும் விட்டேம்; அலர்க, இவ் ஊரே! |
10 |
முழங்குகின்ற அலைகொணர்ந்து கொழித்த பெரிய எக்கர் மணலை நுணங்கிய துகிலின் நுடக்கத்தைப் போலாக; மிகுதி படக் காற்றுத் தூற்றாநிற்கும்; நீர்மிக்க வலிய கடற்கரைத் தலைவனே! ; பூப்போன்ற எமது தலைவியின் நலத்தைப் புதுவதாக நுகர்ந்து வைத்தும் நீ அறிந்தனையல்லையாகலின்; யாம் நினக்கு உடம்படுதலையுடைய எம்முள்ளத்தில் வருத்தமுற அதனையேற்று; குற்றமற்ற கற்பினையுடைய மடவாளொருத்தி; தன் குழவியைப் பலிகொடுப்ப வாங்குதலும் அவள் அதனைக் கைவிட்டாற்போல; முன்னாளின் முதற்கொண்டு எம்முடன் வளர்ந்துவந்த நாணும் விட்டேம். இவ்வூர் அலர்க இனி இவ்வூர் அலர் எழுவதாக;
வரைவு நீட்டித்தவழி, தோழி தலைமகற்குச் சொல்லி வரைவு கடாயது. - அறிவுடைநம்பி
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 15. நெய்தல், இலக்கியங்கள், நெய்தல், நற்றிணை, அலர்க, இவ்வூர், வரைவு, விட்டேம், எக்கர், எட்டுத்தொகை, சங்க, நாணும்