நற்றிணை - 141. பாலை

இருஞ் சேறு ஆடிய கொடுங் கவுள், கய வாய், மாரி யானையின் மருங்குல் தீண்டி, பொரி அரை ஞெமிர்ந்த புழற் காய்க் கொன்றை, நீடிய சடையோடு ஆடா மேனிக் குன்று உறை தவசியர் போல, பல உடன் |
5 |
என்றூழ் நீள் இடைப் பொற்பத் தோன்றும் அருஞ் சுரம் எளியமன், நினக்கே; பருந்து பட, பாண்டிலொடு பொருத பல் பிணர்த் தடக் கை ஏந்து கோட்டு யானை இசை வெங் கிள்ளி வம்பு அணி உயர் கொடி அம்பர் சூழ்ந்த |
10 |
அரிசில் அம் தண் அறல் அன்ன, இவள் விரி ஒலி கூந்தல் விட்டு அமைகலனே. |
நெஞ்சமே! பெரிய செவ்விய மத்தகத்தையுடைய வளைந்த கவுளையும் அகன்ற வாயையுமுடைய கரிய மேகம் போன்ற யானையின்; விலா வுரிஞ்சுதலானே பொரிந்துள்ள அடிபரந்த உள்ளே துளைபொருந்திய காய்களையுடைய கொன்றை மரங்கள்; குன்றின்கண்ணே யுறைகின்ற நீண்ட சடையையும் அசையாத மெய்யையுமுடைய தவஞ்செய்பவர் போலே பலவும் வெயில் நிலைபெற்ற இடங்களில் அழகுபெறத் தோன்றாநிற்கும்; செல்லுதற்கரிய சுரம் நினக்கு மிக எளிய ஆகும் ஆதலின் நீயே சென்றுகாண்; கொல்லும் பிணங்களிலே பருந்து விழுந்து அலைக்குமாறு பகைவருடைய தேர்ப்படையோடு போர் செய்து வென்ற பலவாய சருச்சரையுடைய நீண்ட கையையும் தலையேந்திய கோட்டினையுமுடைய யானைப்படையையுடைய புகழ்விரும்பிய கிள்ளி வயளவனது; புதுவதாக அலங்கரித்த உயர்ந்த கொடி கட்டிய அம்பர் நகரைச் சூழ்ந்த அரிசிலாற்றின் தௌ¤ந்த கருமணல் போன்ற; இவளுடைய விரிந்த தழைந்த கூந்தலின்கண்ணே துயிலுவதனைக் கைவிட்டுச் சிறிது பொழுதேனும் அமைகுவேன் அல்லேன்;
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைவன் சொல்லிச் செலவு அழுங்கியது. - சல்லியங்குமரனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 141. பாலை, இலக்கியங்கள், நற்றிணை, பாலை, கொடி, அம்பர், சூழ்ந்த, நீண்ட, கிள்ளி, கொன்றை, எட்டுத்தொகை, சங்க, யானையின், சுரம், பருந்து