நற்றிணை - 139. முல்லை

உலகிற்கு ஆணியாகப் பலர் தொழ, பல வயின் நிலைஇய குன்றின் கோடுதோறு ஏயினை, உரைஇயரோ!- பெருங் கலி எழிலி! படுமலை நின்ற நல் யாழ் வடி நரம்பு எழீஇயன்ன உறையினை! முழவின் |
5 |
மண் ஆர் கண்ணின் இம்மென இமிரும்- வணர்ந்து ஒலி கூந்தல் மாஅயோளொடு புணர்ந்து இனிது நுகர்ந்த சாரல் நல் ஊர், விரவு மலர் உதிர வீசி- இரவுப் பெயல் பொழிந்த உதவியோயே! |
10 |
பெரிய ஓசையையுடைய மேகமே!; மத்தளத்தின் மார்ச்சனை வைத்த கண்போல இம்மென முழங்குகின்ற இடிகளுடனே; கடைகுழன்று தாழ்ந்த கூந்தலையுடைய மாமைநிறத்தையுடைய காதலியுடனே முயங்கி அவளது நலனை இனிதாக நுகர்ந்து யான் உறைகின்ற சாரலிலுள்ள நல்ல ஊரின்கண்ணே; கலந்த மலர்கள் உதிரும்படி மோதி இரவில் மழை பொழிந்த உதவியையுடையாய்; நீ நிலைபெறுதலையுடைய நல்ல யாழின் முறுக்கிய நரம்பினின்று 'படுமலை' என்னும் பண்ணினை எழுப்பினாற் போன்ற ஒலியொடு பெய்யும் மழையினை உடையையாகி; இவ்வுலகத்துக்கோர் ஆதாரமாக யாவருந் தொழுமாறு ஆங்காங்குள்ள நிலைநின்ற பலவாகிய குன்றின் கொடுமுடிகள் தோறும்; பொருந்தி உலாவுவாயாக;
தலைவன் வினைமுற்றி வந்து பள்ளியிடத்தானாக, பெய்த மழையை வாழ்த்தியது. - பெருங்கௌசிகனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 139. முல்லை, இலக்கியங்கள், நற்றிணை, முல்லை, பொழிந்த, நல்ல, இம்மென, குன்றின், எட்டுத்தொகை, சங்க, படுமலை