நற்றிணை - 121. முல்லை

விதையர் கொன்ற முதையல் பூழி, இடு முறை நிரப்பிய ஈர் இலை வரகின் கவைக் கதிர் கறித்த காமர் மடப் பிணை, அரலை அம் காட்டு இரலையொடு, வதியும் புறவிற்று அம்ம, நீ நயந்தோள் ஊரே: |
5 |
'எல்லி விட்டன்று, வேந்து' எனச் சொல்லுபு பரியல்; வாழ்க, நின் கண்ணி!- காண் வர விரி உளைப் பொலிந்த வீங்கு செலல் கலி மா வண் பரி தயங்க எழீஇ, தண் பெயற் கான் யாற்று இகுமணற் கரை பிறக்கு ஒழிய, |
10 |
எல் விருந்து அயரும் மனைவி மெல் இறைப் பணைத் தோள் துயில் அமர்வோயே! |
அழகு பொருந்த விரிந்த தலையாட்டமமைந்த விரைந்த செலவினையும் கனைத்தலையும் உடைய வளவியபரிமா விளங்க; எழுந்து தண்ணிய மழை பெய்தலாலே பெருகிய கான் யாற்றினருகில் இடப்பட்ட மணலானாகிய கரைபின்னே செல்லும்படி போந்து; நின் புதிய வரவை விரும்பி ஏற்று மகிழும் மனைவியினுடைய மென்மையாயுயர்ந்து பருத்த தோளின் கண்ணவாகிய துயிலை விரும்புகின்ற இறைவனே !; நம் அரசன் நேற்றிரவுதான் போரை முடித்து நின்னைச் செல்லுமாறு விடை கொடுத்தான் என்று கூறி வருந்தாதே கொள் !; நின் மாலை வாடாது நீடு வாழ்வதாக; நீ விரும்பிச் செல்லும் காதலியின் ஊர்; விதை விதைக்கும் ஆயர் பலபடியாக உழுதுபுரட்டிய பழங்கொல்லைப் புழுதியில் நிறைவுற முறையே விதைக்கப்பட்டுள்ள ஈரிய இலை நிரம்பிய வரகின் கவைத்த கதிர்களைத் தின்ற கண்டார்க்கு விருப்பம் வருகின்ற இளைய பிணை மான்; மரல் வித்துக்கள் உதிர்ந்து கிடக்கும் அழகிய காட்டின்கண்ணே கலையொடு மகிழ்ந்து விளையாடாநிற்கும் இப் புறவத்தின்கணுள்ளது கண்டனையாதலின் விரையச் சென்று இன்னே காணுமாறு கதுமெனத் தேரைச் செலுத்துகிற்பேன் காண்!;
வினை முற்றி மறுத்தரும்தலைமகற்குத் தேர்ப்பாகன் சொல்லியது. - ஒரு சிறைப்பெரியனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 121. முல்லை, இலக்கியங்கள், நின், நற்றிணை, முல்லை, காண், கான், வரகின், எட்டுத்தொகை, சங்க, பிணை