நற்றிணை - 102. குறிஞ்சி

கொடுங் குரற் குறைத்த செவ் வாய்ப்பைங் கிளி! அஞ்சல் ஓம்பி, ஆர் பதம் கொண்டு, நின் குறை முடித்த பின்றை, என் குறை செய்தல்வேண்டுமால்; கை தொழுது இரப்பல்; பல் கோட் பலவின் சாரல் அவர் நாட்டு, |
5 |
நின் கிளை மருங்கின், சேறிஆயின், அம் மலை கிழவோற்கு உரைமதி- இம் மலைக் கானக் குறவர் மட மகள் ஏனல் காவல் ஆயினள் எனவே. |
வளைந்த தினைக் கதிர்களைக் கொய்துகொண்டு போகாநின்ற சிவந்த வாயையுடைய பசிய கிள்ளாய்; அஞ்சாதே கொள்! நீ இக்கதிர்களைக் கொய்தல் காரணமாக யாரேனும் நின்னை அச்சுறுத்துவார் கொல்லோ? என்னும் ஐயத்தைப் போக்கி ; வேண்டிய உணவைக் கொண்டுநின் குறையெல்லாம் முடித்த பின்பு; ஒழிவெய்திய காலத்தில் என்னுடைய குறைபாட்டைச் செய்து முடிக்க வேண்டும். இது நின்னை யான் என் கைகளைக் குவித்துத் தொழுது இரந்து கேட்கின்றேன்; அக்குறைபாடுதான் யாதோவெனின் பலவாய காய்களைக் காய்க்கின்ற பலா மரங்கள் மிக்க சாரலையுடைய அவர் நாட்டின்கணுள்ள நின் சுற்றத்தினிடத்து நீ ஒருபொழுது செல்லுவையாயின்; அம்மலைக்கு உரியராகிய எனது காதலரை நோக்கி இந்த மலையைச் சூழ்ந்த காட்டின்கணுள்ள குறவருடைய இளமகள் முன்போலவே; தினைக் கொல்லைக் காவலுக்கு அமைந்து ஆண்டிருக்கின்றாளென்று இவ்வொன்றனை மட்டும் உரைத்து என் இவ்வொரு குறையைச் செய்துமுடிப்பாயாக !
காமம் மிக்க கழிபடர்கிளவி. - செம்பியனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 102. குறிஞ்சி, இலக்கியங்கள், குறிஞ்சி, நற்றிணை, நின், தினைக், நின்னை, மிக்க, அவர், குறை, எட்டுத்தொகை, சங்க, முடித்த, தொழுது