குறுந்தொகை - 175. நெய்தல் - தலைவி கூற்று
(தலைவன் பிரிந்திருந்த காலத்து ஆற்றாளாகிய தலைவியை நோக்கி, “நீ ஆற்றியிருத்தல் வேண்டும்” என்று தோழி வற்புறுத்தினாளாக, “நான் வருந்துகின்றேனல்லேன்; ஊரார் யாது கூறினும் கூறுக” என்று தலைவி சொல்லியது.)
பருவத் தேனசைஇப் பல்பறைத் தொழுதி உரவுத்திரை பொருத திணிமணல் அடைகரை நனைந்த புன்னை மாச்சினை தொகூஉம் மலர்ந்த பூவின் மாநீர்ச் சேர்ப்பற் கிரங்கேன் தோழியீங் கென்கொ லென்று |
5 |
பிறர்பிறர் அறியக் கூறல் அமைந்தாங் கமைக அம்பல தெவனே. |
|
- உலோச்சனார். |
தோழி! செவ்வியை யுடைய தேனை விரும்பி பல வண்டுக்கூட்டங்கள் உலாவுதலையுடைய அலைகள் மோதிய செறிந்தமணல் அடைந்த கரையின் கண் உள்ள அலைத் துவலையால் நனைந்த புன்னை மரத்தினது பெரிய கிளையின்கண் கூடுகின்ற மலர்ந்த மலர்களையும் கரிய நீரையுமுடைய கடற்கரைத் தலைவன்பொருட்டு வருந்தேன்; இவ்விடத்து இவள் ஏன் இங்ஙனம் ஆயினளென்று பிறர் பிறர் அறியும்படி கூறிதல் அவர்களுடைய மனம் அமைந்தபடி அமைக; அவர்கள் கூறும் அம்பல் என்ன துன்பத்தைச் செய்வதாகும்?
முடிபு: தோழி, சேர்ப்பற்கு இரங்கேன்; பிறர் கூறல் அமைக; அம்பல் எவன்?
கருத்து: ஊரவர் கூறும் பழிமொழியை யான் அஞ்சேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 175. நெய்தல் - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, நெய்தல், பிறர், தோழி, கூற்று, குறுந்தொகை, அம்பல், அமைக, கூறும், கூறல், மலர்ந்த, எட்டுத்தொகை, நனைந்த, புன்னை, சங்க