குறுந்தொகை - 146. குறிஞ்சி - தோழி கூற்று
(தலைவன் சான்றோரைத் தலைவியின் தமர்பால் மணம் பேசி வர விடுப்ப, தன்தமர் மறுப்பாரோ என்று அஞ்சிய தலைவியை நோக்கி, “தலைவன் வரைவை நமர் ஏற்றுக்கொண்டனர்; நீ கவலை ஒழிவாயாக” என்று தோழி கூறியது.)
அம்ம வாழி தோழி நம்மூர்ப் பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர் நன்றுநன் றென்னு மாக்களோ டின்றுபெரி தென்னும் ஆங்கண தவையே. |
5 |
- வெள்ளி வீதியார். |
தோழி! கேட்பாயாக; அவ்விடத்திலுள்ளதாகிய நம்மைச் சார்ந்த குழுவிலுள்ளார் தண்டைப் பிடித்த கையினரும் நரையையுடைய தலைக்கண் துகிலையுடையவருமாகிய நன்று நன்று என்று கூறும் தலைவன் தமரோடு இந்நாள் நீங்கள் வரப் பெற்றமையால் பெருமையுடையதென்று முகமன் கூறுவர்; ஆதலின் நமது ஊரின்கண் பிரிந்தவர்களைச் சேர்த்து வைப்போர் இருந்தனர்.
முடிபு: அவை மாக்களோடு இன்று பெரிதென்னும்; பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர்.
கருத்து: தலைவன் வரைவை நமர் ஏற்றுக் கொண்டனர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 146. குறிஞ்சி - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், கூற்று, இருந்தனர், குறிஞ்சி, தலைவன், குறுந்தொகை, புணர்ப்போர், நன்று, பிரிந்தோர்ப், நமர், எட்டுத்தொகை, வரைவை, சங்க