குறுந்தொகை - 133. குறிஞ்சி - தலைவி கூற்று
(தலைவன் வரைந்து கொள்ளாமல் நெடுங்காலம் இருந்தானாக, வருந்திய தலைவி, “என் நலத்தை இழந்தும் தலைவர் வரைவாரென்னும் கருத்தினால் இன்னும் உயிர்தாங்கி நிற்கின்றேன்” என்று கூறியது.)
புனவன் துடவைப் பொன்போற் சிறுதினை கிளிகுறைத் துண்ட கூழை யிருவி பெரும்பெய லுண்மையி னிலையொலித் தாங்கென் உரஞ் செத்தும் உளெனே தோழியென் நலம்புதி துண்ட புலம்பி னானே. |
5 |
- உறையூர் முதுகண்ணன் சாத்தனார். |
தோழி! குறவனுக்குரிய தோட்டத்தில் விளைந்த பொன்னைப் போன்ற சிறிய தினையினது கதிரை கிளி ஒடித்து உண்ணுதலால் கூழையாகிய தாளில் பெரிய மழை உண்டானமையால் இலை தழைத்தாற் போல தலைவர் எனது பெண்மை நலத்தைப் புதிதுண்டமையால் உண்டாய தனிமை வருத்தத்தோடு எனது வலி அழிந்தும் இன்னும் உயிரோடு இருக்கின்றேன்.
முடிபு: தோழி, புலம்பினான் உரஞ்செத்தும் உளென்.
கருத்து: தலைவர் அருள் செய்வாரென்று இன்னும் உயிர் தாங்கி நிற்கின்றேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 133. குறிஞ்சி - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, குறிஞ்சி, இன்னும், குறுந்தொகை, கூற்று, தலைவர், எனது, தோழி, சங்க, எட்டுத்தொகை, துண்ட