கலித்தொகை - கலித்தொகை - நெய்தற் கலி 126
பொன் மலை சுடர் சேர, புலம்பிய இடன் நோக்கி, தன் மலைந்து உலகு ஏத்த, தகை மதி ஏர்தர, செக்கர் கொள் பொழுதினான் ஒலி நீவி, இன நாரை முக்கோல் கொள் அந்தணர் முது மொழி நினைவார் போல், எக்கர் மேல் இறைகொள்ளும், இலங்கு நீர்த் தண் சேர்ப்ப! | 5 |
அணிச் சிறை இனக் குருகு ஒலிக்குங்கால், நின் திண் தேர் மணிக் குரல் என இவள் மதிக்கும்மன்; மதித்தாங்கே, உள் ஆன்ற ஒலியவாய் இருப்பக் கண்டு, அவை கானற் புள் என உணர்ந்து, பின் புலம்பு கொண்டு, இனையுமே நீர் நீவிக் கஞன்ற பூக் கமழுங்கால், நின் மார்பில் | 10 |
தார் நாற்றம் என இவள் மதிக்கும்மன்; மதித்தாங்கே, அலர் பதத்து அசைவளி வந்து ஒல்க, கழி பூத்த மலர் என உணர்ந்து, பின் மம்மர் கொண்டு, இனையுமே; நீள் நகர் நிறை ஆற்றாள், நினையுநள் வதிந்தக்கால், தோள் மேலாய் என நின்னை மதிக்குமன்; மதித்தாங்கே, | 15 |
நனவு எனப் புல்லுங்கால், காணாளாய், கண்டது கனவு என உணர்ந்து, பின் கையற்று, கலங்குமே; என ஆங்கு, பல நினைந்து, இனையும் பைதல் நெஞ்சின், அலமரல் நோயுள் உழக்கும் என் தோழி | 20 |
மதி மருள் வாள் முகம் விளங்க, புது நலம் ஏர்தர, பூண்க, நின் தேரே! |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை - கலித்தொகை - நெய்தற் கலி 126, இலக்கியங்கள், பின், கலித்தொகை, மதித்தாங்கே, உணர்ந்து, நெய்தற், கலித்தொகை, நின், கொண்டு, இனையுமே, கொள், எட்டுத்தொகை, சங்க, ஏர்தர, இவள், மதிக்கும்மன்