எனது நாடகப் பார்வை - நாடகக் கலைக் கட்டுரைகள்
எனது நாடகப் பார்வை
தாசீசியஸ்
(ஈழத்து நாடக வரலாற்றில் புதிய போக்கை நிறுவியவர்களுள் தாசீசியஸ் ஒருவர். அவர் மேற்கத்திய நாடக நுட்பங்களையும், தமிழ் மரபுக் கலைகளையும் இணைத்துப் புதிய போக்கை ஏற்படுத்தினார். அது மிகுந்த வரவேற்பைப் பெற்றது; பலரை ஈடுபட வைத்தது; அந்தப் போக்கில் பல நாடகங்களைத் தயாரிக்க வைத்தது. அந்த வகையில் தாசீசியஸ் சிறந்த நடிகர் விருதையும், சிறந்த இயக்குநர் விருதையும் இலங்கை ஜனாதிபதியிடமிருந்து பெற்றார். ஆரம்பத்தில் ஆங்கில நாடகத் தயாரிப்புகளில் ஈடுபட்டு, மேற்கத்திய நுட்பங்களைக் கற்று, பின் தமிழ் நாடகத்திற்குத் திரும்பி, கிராமம் கிராமமாக அலைந்து, மரபை நாடகத்திலேயே இழையோடச் செய்தார். கற்றது கை மண்ணளவு என்றாலும் அதை முழுமையாகப் பயன்படுத்துகிறார். அவரது நாடகப் பயிற்சிகளை ஈழத்து அறிஞர்கள் பலரும் போற்றுகிறார்கள். நாடக வரலாற்றில் அவருக்கு முக்கிய இடமளிக்கிறார்கள். கடந்த பத்து ஆண்டுகளாக லண்டன் பி.பி.சி. நிறுவனத்தில் பணியாற்றினாலும், நாடகத்தில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இவரது சமீபத்திய நாடகமான 'ஸ்ரீசலாமி' ஜெர்மன் மொழியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அதோடு தாசீசியஸ் ஐரோப்பிய நாடுகளில் நாடகப் பயிற்சியளித்து வருகிறார். ஸ்விட்சர்லாந்து தனது எழுநூறாவது ஆண்டு விழாவைக் கொண்டாட நினைத்தபோது அங்குக் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு ஆலோசகராகவும் பயிற்சியளிப்பவராகவும் தாசீசியஸை தேர்வு செய்தது. இப்படித் தமிழ் நாடகக் கலைஞர் ஒருவர் மேற்கத்திய நாடுகளில் பயிற்சியளிப்பது தமிழுக்குப் பெருமை. அந்தப் பெருமை கொண்ட தாசீசியஸ் சமீபத்தில் சென்னை வந்திருந்தபோது சந்தித்தோம்.)
* உங்களை யாராக அறிமுகப்படுத்திக் கொள்ள விரும்புகிறீர்கள்?
* நாடகன் என்று அறிமுகப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். ஏனென்றால் நான் நாடகத்தைக் கற்றவன், கற்றுக் கொடுப்பவன் என்ற முறையில் அப்படிச்சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
* நாடகம் என்றால் என்னவென்று சொல்வீர்கள்?
* எனது பேராசான் சு.வித்தியானந்தம் நாடகத்தை நாடு + அகம் அதாவது நாட்டின் அகத்தைக் காட்டுவதுதான் நாடகத்தின் பணி என்றார். அப்படி அகத்தைக் காட்டும்போது அதில் உள்ள பிரச்சினைகளை எவ்வளவு தூரம் தீர்க்கலாம் என்ற ஆய்வைத் தருவதாக இருக்க வேண்டும் என்றும் சொன்னார்.
* நாடகத்தில் ஈடுபட்டது எப்படி?
* இலங்கையில் கிராமங்களிலே நாடக, கூத்து வடிவங்கள் ஓம்பி வளர்க்கப்பட்டன. நான் சிறுவனாக இருந்தபோது கூத்துப் பயிற்சி நடக்கும். பெரியவர்கள் ஒரு பக்கம் பயிற்சி எடுத்துக் கொண்டால் சிறுவர்கள் அதைப் பார்த்து தூரத்தில் தாங்களாகவே பழகுவார்கள். அப்படி நானும் செய்திருக்கிறேன். அது தந்த ஈடுபாடு முக்கியமானது. பின்னர், பள்ளிக்கூடத்தில் நடந்த நாடகப் போட்டியில் நடித்தது - அதாவது குசேலர் நாடகத்தில் முதல் மகனாக நடித்தேன். அந்த நாடகத்தில் அப்பா உணவை அம்மாவிடம் கொடுத்ததும், பிள்ளைகள் அனைவரும் சாப்பிடப் போட்டி போடுவார்கள். அப்போது எனது கால்சட்டையைத் தம்பிகள் இழுப்பார்கள். அப்படி ஒத்திகையில் இருக்கும்போது கால்சட்டை அவிழாது. ஆனால் நாடகப்போட்டியில் (மேடையில்) ஒரு மஞ்சள் துண்டு கட்டியிருந்தேன். வழக்கம்போல் உணவைப் பிடுங்கிச் சாப்பிடும்போது தம்பி இழுத்தான். துண்டு அவிழ்ந்துவிட்டது. உள்ளே எதுவும் இல்லை. நானோ சாப்பிடுவதில் குறியாக இருந்தேன். சாப்பிட்டு முடித்த பின்பு இடுப்பைப் பார்த்தால் துண்டு இல்லை. பிறகு பார்த்தேன். கீழ் கிடந்தது. எடுத்துக் கட்டிக் கொண்டேன். ஆனால் ஏதாவது தண்டனை கிடைக்குமோ என்று பயந்தேன். பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது. பின்பு நடுவராக வந்திருந்த ஷேக்ஸ்பியர் நாடகங்களை இயக்கிய ஆம்ஸ்ட்ராங் என்பவர் நாயகன் நாயகிக்குப் பரிசு கொடுத்து விட்டீர்கள். ஆனால் நான் ஒரு சிறந்த நடிகனுக்குப் பரிசு தரப் போகிறேன் என்று தனது பையிலிருந்து பத்து ரூபாயை எடுத்து, என்னைப் பாராட்டிக் கொடுத்தார். அது ஒரு பிடிப்பாக அமைந்தது. அதிலிருந்து நடிப்பதற்கு நம்பிக்கையும் பெற்றேன். பிறகு ஒன்பதாவது வயதில் எனது கூத்து அரங்கேற்றம் நடந்தது. அதற்குப் பின்பு இலங்கை பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் ஆஸ்லி ஹல்பேலிடம் ஆங்கில நாடகப் பயிற்சி எடுத்துக் கொண்டேன். அந்த நேரம்தான் நாடகத்தில் தீவிரமாக ஈடுபட்டேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
எனது நாடகப் பார்வை - நாடகக் கலைக் கட்டுரைகள், நாடகப், எனது, தாசீசியஸ், நாடகத்தில், நாடக, நாடகக், பார்வை, அப்படி, பயிற்சி, தமிழ், சிறந்த, கொள்ள, நான், மேற்கத்திய, அந்த, எடுத்துக், கட்டுரைகள், பின்பு, கலைக், துண்டு, பரிசு, விரும்புகிறேன், அதாவது, அறிமுகப்படுத்திக், கொண்டேன், கூத்து, இல்லை, அகத்தைக், பிறகு, பெருமை, நடந்தது, விருதையும், ஈழத்து, வரலாற்றில், போக்கை, நாடகம், கலைகள், drama, arts, ஒருவர், மிகுந்த, ஆங்கில, பத்து, நாடுகளில், இலங்கை, அந்தப், வரவேற்பைப், வைத்தது, தனது