புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ் நாடகக்கலை - நாடகக் கலைக் கட்டுரைகள்
புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ் நாடகக்கலை
-நா. மகேசன்
நோக்கம் :
மக்களை ஈர்க்கக் கூடிய கலைகளிலே நாடகக்கலையும் ஒன்று. நாடகங்கள் குறிப்பிட்ட ஒரு கொள்கையை மக்களிடையே பரப்புவதற்கு வாய்ப்பான ஒரு சாதனமாகும். திரைப்படம், தொலைக்காட்சி முதலிய வெகுசன சாதனங்களின் வளர்ச்சிக்கு நாடகக்கலை பெரிதும் பயன் உள்ளதாய் அமைந்திருப்பதை எவரும் மறுக்க முடியாது. புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் மக்கள் நாடகக் கலையை அணுகும்போது சற்று வித்தியாசமாகவே அணுக வேண்டும். கலை கலைக்காக என்ற கொள்கையோடு புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் நாடகக்கலையை அணுகுவது அவ்வளவு பொருத்தமாக அமையாது. இவ்வகைப்பட்ட மக்கள், ஒரு பத்தாண்டுகால எல்லைக்குள்தான் பெருமளவில் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள். இவர்களிடையே பல கொள்கைகளைப் பரப்பவேண்டிய தேவையும் பொறுப்பும் தமிழ் நாடகக் கலைஞருக்கு உண்டு.
இனஉணர்வு, மொழியுணர்வு, தாய்நாட்டுப்பற்று, சமயஉணர்வு, தாம்வாழும் நாட்டில் வாழும் மக்களுடைய கலை, கலாசாரங்களில் முழுவனே அமிழ்ந்து போகாது, தமிழ்க் கலை கலாசாரங்களைப் பேணும் அதேவேளையில், வசிக்கும் நாட்டின் கலை, கலாசாரங்களை மதித்து நடக்கின்ற ஒரு சுமுகமான வாழ்க்கை முறையை உருவாக்கிக் கொள்வது போன்ற பல அரிய கொள்கைகளைத் தம்மின மக்களிடையே பரப்ப வேண்டிய கடமை தற்போதுள்ள நாடகக் கலைஞருக்கு உண்டு. நாடகக் கலையை நுட்ப திட்பங்களோடு வளர்ப்பதும், ஆராய்ச்சிக் கண்கொண்டு பார்ர்ப்பதும் உன்னதமான நிலைதான். அந்த உன்னதமான நிலைக்குப் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தயாராக உள்ளார்களா என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று. புலம்பெயர்ந்த நாடுகளிலே நாடகக்கலை எவ்வளவு தூரம் வளர்ச்சி அடைந்திருக்கிறது. வளர்ச்சிக்குத் தடையாய் உள்ள காரணிகள் எவை. எதிர்காலத்தில் நாடகக்கலையை வளர்க்க வேண்டப்படுவன என்ன என்பனவற்றை ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.
புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ் நாடகக் கலையின் வளர்ச்சி :
மேடை நாடகங்கள் :
தமிழ் நாடகங்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று மேடை நாடகங்கள் மற்றது வானொலி நாடகங்கள். முதலில் மேடை நாடகங்களைக் கவனிப்போம். இனஉணர்வு, மொழியுணர்வு, தாய்நாட்டுப் பற்று முதலிய கொள்கைகளைப் பரப்புகின்ற மேடைநாடகங்கள் ஐரோப்பிய நாடுகளிலும், இலண்டன், கனடா, அவுஸ்திரேலியா முதலிய நாடுகளிலும் அவ்வப்போது அரங்கேற்றப்பட்டுள்ளன. இவை நாடகக் கலையை வளர்த்து, அதன் வழியே கொள்கைகளைப் பரப்ப வேண்டும் என்ற நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டன என்று தோன்றவில்லை. இவ்வகை நாடகங்கள் அரங்கேறிய ஒரு சில நாட்கள் மட்டும் அவற்றைப் பற்றிய பேச்சு பார்வையாளர்களிடையே நிகழ்ந்ததே தவிர, சமுதாயத்தில் பெரும் மாற்றமோ நெகிழ்வோ ஏற்பட்டதாகத் தெரியவில்லை. இருப்பினும் இந்த நாடகங்கள் மக்களிடையே இனஉணர்வு முற்றாக அற்றுப்போகாமல் இருக்க உதவின என்பது உண்மை. இவ்வகை முயற்சிகளிலே ஈடுபட்ட கலைஞர்களில் ஒரு சிலரைத் தவிர ஏனையோர் தொடர்ச்சியாக நாடகக்க கலையிலே ஈடுபட்டு, நாடகக் குழுக்களாக இயங்கி வருவதாகத் தெரியவில்லை.
தாம் வாழுகிற் சூழலைப் பிரதிபலித்து, பல்லினக் கலாசாரத்தை அகலாமலும், அணுகாமலும், தீக்காய்வார்போல வாழ்கின்ற கொள்கைகளைப் பரப்புகின்ற நாடகங்கள் மிக மிகக் குறைவாகவே கடந்த காலத்தில் அரங்கேறி உள்ளன. அவுஸ்திரேலியாவிலே சிட்னி நகரைப் பொறுத்தமட்டில் தமிழ் இளைஞர்கள் 1989 தொடக்கம் 1994ம் ஆண்டுக் காலஎல்லைக்குள் ஏறக்குறையப் பத்து இவ்வகைப்பட்ட நாடகங்களை அரங்கேற்றியுள்ளார்கள். தக்க முறையில் நாடகங்களைப் பழகி, நாடகம் கேலிக் கூத்தல்ல, தாக்கமான ஒரு சிறந்த கலைவடிவம் என்பதை ஆணித்தரமாக எடுத்துக்காட்டினார்கள். இந்த நாடகங்களின் பின்னர் சிட்னிவாழ் தமிழ் மக்கள் தரமான நாடகங்களை இனம்காணக் கூடிய சூழல் உருவாகியது என்றால் மிகையாகாது. ஆனால் இந்த நாடகங்களால் சமுதாயத்தில் பெரும் மாறுதல் ஏற்பட்டது என்றோ, மக்களுக்கு நாடகக் கலையில் ஆர்வம் ஏற்பட்டுத் தாமாகவே விரும்பி நாடகங்களைத் தேடிப் போய் பார்க்கின்ற புத்துணர்வு ஏற்பட்டது என்றோ சொல்ல முடியாது. பங்கு கொண்ட இளைஞர்களுடைய தமிழ் அறிவும், தமிழ்ப் பற்றும் அற்றுப் போகாமல் இருக்க இந்த நாடகங்கள் உதவின என்று மட்டுமே கூறலாம். தக்க ஆதரவும், ஊக்கமும் கிடைக்காமற் போகவே இவர்கள் இவ்வகைப்பட்ட முயற்சிகளில் பின்னர் அதிகம் ஈடுபடவில்லை. தொடர்ந்து ஒரு குழுவாக இயங்கியதாகவும் தெரியவில்லை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ் நாடகக்கலை - நாடகக் கலைக் கட்டுரைகள், நாடகக், தமிழ், நாடகங்கள், புலம்பெயர்ந்த, நாடகக்கலை, நாடுகளில், கொள்கைகளைப், வாழும், புலம்பெயர்ந்து, கலையை, மக்கள், இனஉணர்வு, மேடை, நாடகங்களை, மக்களிடையே, இவ்வகைப்பட்ட, முதலிய, கட்டுரைகள், தெரியவில்லை, கலைக், ஒன்று, நாடுகளிலும், இவ்வகை, என்றோ, பரப்புகின்ற, ஏற்பட்டது, வளர்ச்சி, தக்க, இருக்க, பெரும், சமுதாயத்தில், உதவின, என்பது, தவிர, பின்னர், நாடகக்கலையை, திரைப்படம், நோக்கம், கூடிய, நாடகம், கலைகள், drama, arts, முடியாது, வேண்டும், பரப்ப, வேண்டிய, மொழியுணர்வு, உண்டு, தமிழர்கள், கலைஞருக்கு, உன்னதமான