பாடல் 74 - திருச்செந்தூர் - திருப்புகழ்
ராகம் - .....;
தாளம் - .......
தந்தனா தந்தனத் தந்தனா தந்தனத் தந்தனா தந்தனத் ...... தனதான |
பங்கமே வும்பிறப் பந்தகா ரந்தனிற் பந்தபா சந்தனிற் ...... றடுமாறிப் பஞ்சபா ணம்படப் புண்படா வஞ்சகப் பண்பிலா டம்பரப் ...... பொதுமாதர் தங்களா லிங்கனக் கொங்கையா கம்படச் சங்கைமால் கொண்டிளைத் ...... தயராதே தண்டைசூழ் கிண்கிணிப் புண்டா£ கந்தனை தந்துநீ யன்புவைத் ...... தருள்வாயே அங்கைவேல் கொண்டரக் கன்ப்ரதா பங்கெடுத் தண்டவே தண்டமுட் ...... படவேதான் அஞ்சவே திண்டிறற் கொண்டலா கண்டலற் கண்டலோ கங்கொடுத் ...... தருள்வோனே திங்களார் கொன்றைமத் தந்துழாய் துன்றுபொற் செஞ்சடா பஞ்சரத் ...... துறுதோகை சிந்தையே தென்றிசைத் தென்றல்வீ சும்பொழிற் செந்தில்வாழ் செந்தமிழ்ப் ...... பெருமாளே. |
குற்றங்களோடு பொருந்திய பிறப்பு என்னும் பேரிருளில், பந்த பாசங்களில் தடுமாற்றம் அடைந்து, (மன்மதனின்) ஐந்து அம்புகளும் பாய்வதால் புண்பட்டு, வஞ்சகமுள்ள, நற்குணம் இல்லாத ஆடம்பரமான விலைமாதர்களின் தழுவுதலால் அவர்களின் மார்பகங்கள் உடலில் பட, குற்ற உணர்ச்சியும் ஆசையும் கொண்டு இளைத்துத் தளராமல், தண்டையும், அவற்றைச் சூழ்ந்துள்ள கிண்கிணியும் அணிந்துள்ள தாமரை போன்ற திருவடியைக் கொடுத்து, நீ என் மீது அன்பு கொண்டு அருள் புரிவாயாக. அழகிய கையில் வேல் எடுத்து, அண்டங்களும் மலைகளும் உட்பட யாவும் பயப்படும்படி, சூரனாகிய அசுரனது பெருமையைக் கெடுத்தவனே, திண்ணிய திறலைக் கொண்ட மேக வாகனனாகிய தேவேந்திரனுக்கு விண்ணுலகத்தைக் கொடுத்து அருள் புரிந்தவனே, நிலவு, ஆத்தி, கொன்றை, ஊமத்தம் மலர், துளசி (இவைகள்) நெருங்கிய, அழகிய, சிவந்த (சிவ பெருமானின்) சடையாகிய கூட்டிலிருக்கும் கங்கையாகிய நங்கையின் சிந்தைக்கு உகந்தவனே, தென் திசையிலிருந்து தென்றல் வீசும் சோலைகள் (நிறைந்த) திருச்செந்தூரில் வீற்றிருக்கும் செந்தமிழ்ப் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 74 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தனா, தந்தனத், அருள், அழகிய, கொடுத்து, பெருமாளே, செந்தமிழ்ப், கொண்டு