பாடல் 706 - கோடைநகர் - திருப்புகழ்

ராகம் - ஹம்ஸாநந்தி
தாளம் - அங்கதாளம் - 10
- மிஸ்ர ஜம்பை /7 யு 0
தகிட தக திமி-3 1/2, தகிட தக திமி-3 1/2, தகதிமிதக-3
தாளம் - அங்கதாளம் - 10
- மிஸ்ர ஜம்பை /7 யு 0
தகிட தக திமி-3 1/2, தகிட தக திமி-3 1/2, தகதிமிதக-3
தான தந்த தனத்த தத்த ...... தனதானா |
ஞால மெங்கும் வளைத்த ரற்று ...... கடலாலே நாளும் வஞ்சி யருற்று ரைக்கும் ...... வசையாலே ஆலமுந்து மதித்த ழற்கும் ...... அழியாதே ஆறி ரண்டு புயத்த ணைக்க ...... வருவாயே கோல மொன்று குறத்தி யைத்த ...... ழுவுமார்பா கோடை யம்பதி யுற்று நிற்கு ...... மயில்வீரா கால னஞ்ச வரைத்தொ ளைத்த ...... முதல்வானோர் கால்வி லங்கு களைத்த றித்த ...... பெருமாளே. |
உலகத்தை எல்லாப் பக்கங்களிலும் சுற்றி வளைத்து ஓயாமல் அலை ஓசையோடு இரைச்சலிடும் கடலாலே, நாள்தோறும் பெண்கள் அனைவரும் சேர்ந்து கூறும் வசைமொழிகளினாலே, விஷக்கதிர்களைச் செலுத்துகிற சந்திரன் (உன்னைப் பிரிந்து தவிக்கும்) இவள் மீது வீசும் நெருப்பாலே, அழிந்து போகாதவாறு, உன் பன்னிரண்டு புயங்களினாலும் இவளை அணைத்துக்கொள்ள நீ வரமாட்டாயா? அழகு பொருந்திய குறத்தி வள்ளியை அணைக்கும் மார்பனே, கோடைநகரில்* வந்து வீற்றிருக்கும் மயில் வீரனே, யமனும் நடுங்க கிரெளஞ்சமலையைத் தொளை செய்த முதல்வனே, தேவர்களுக்கு சூரன் பூட்டிய கால் விலங்குகளை உடைத்தெறிந்த பெருமாளே.
* கோடைநகர் இன்று வல்லைக்கோட்டை என வழங்கப்படுகிறது. ஸ்ரீபெரும்புதூருக்குத் தெற்கே 6 மைலில் உள்ளது.இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காக பாடியது.கடல், சந்திரன், மன்மதன், மலர்க் கணைகள், ஊரார் ஏச்சு இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 706 - கோடைநகர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - பெருமாளே, சந்திரன், குறத்தி, கடலாலே, திமி, தகிட