பாடல் 702 - மாடம்பாக்கம் - திருப்புகழ்

ராகம் - ....;
தாளம் -
தனன தத்தன தனன தத்தன தனந்தந் தந்த தந்தா தனன தத்தன தனன தத்தன தனந்தந் தந்த தந்தா தனன தத்தன தனன தத்தன தனந்தந் தந்த தந்தா ...... தனதனா தனனா |
விலைய றுக்கவு முலைம றைக்கவு மணந்துன் றுஞ்செ ழுந்தார் புனைமு கிற்குழல் தனைய விழ்க்கவும் விடங்கஞ் சஞ்ச ரஞ்சேர் விழிவெ ருட்டவு மொழிபு ரட்டவு நிணந்துன் றுஞ்ச லம்பா ...... யுதிரநீ ருடனே வெளியி னிற்கவும் வலிய முட்டரை யெதிர்ந்தும் பின்தொ டர்ந்தே யிலைசு ணப்பொடி பிளவெ டுத்திடை திரும்பும் பண்ப ரன்றே யெனவு ரைத்தவர் தமைவ ரப்பணி யுடன்கொண் டன்பு டன்போய் ...... சயனபா யலின்மேல் கலைநெ கிழ்க்கவு மயல்வி ளைக்கவு நயங்கொண் டங்கி ருந்தே குணுகி யிட்டுள பொருள்ப றித்தற முனிந்தங் கொன்று கண்டே கலக மிட்டவ ரகல டித்தபின் வரும்பங் கங்கு ணங்கோர் ...... புதியபே ருடனே கதைகள் செப்பவும் வலச மர்த்திகள் குணங்கண் டுந்து ளங்கா மனித னிற்சிறு பொழுது முற்றுற நினைந்துங் கண்டு கந்தே கடிம லர்ப்பத மணுகு தற்கறி விலன் பொங் கும்பெ ரும்பா ...... தகனையா ளுவையோ சிலைத னைக்கொடு மிகஅ டித்திட மனந்தந் தந்த ணந்தா மரைம லர்ப்பிர மனைந டுத்தலை யரிந்துங் கொண்டி ரந்தே திரிபு ரத்தெரி புகந கைத்தருள் சிவன்பங் கங்கி ருந்தா ...... ளருளுமா முருகா செருவி டத்தல கைகள்தெ னத்தென தெனந்தெந் தெந்தெ னந்தா எனஇ டக்கைகள் மணிக ணப்பறை டிகுண்டிங் குண்டி குண்டா டிகுகு டிக்குகு டிகுகு டிக்குகு டிகுண்டிங் குண்டி குண்டீ ...... யெனஇரா வணனீள் மலையெ னத்திகழ் முடிகள் பத்தையு மிரண்டஞ் சொன்ப தொன்றேய் பணைபு யத்தையு மொருவ கைப்பட வெகுண்டம் பொன்றெ றிந்தோன் மதலை மைத்துன அசுர ரைக்குடல் திறந்தங் கம்பி ளந்தே ...... மயிலின்மேல் வருவாய் வயல்க ளிற்கய லினமி குத்தெழு வரம்பின் கண்பு ரண்டே பெருக யற்கொடு சொரியு நித்தில நிறைந்தெங் குஞ்சி றந்தே வரிசை பெற்றுயர் தமனி யப்பதி யிடங்கொண் டின்பு றுஞ்சீர் ...... இளையநா யகனே. |
விலை பேசி முடிவு செய்யவும், மார்பகத்தை (ஆடையால்) மறைக்கவும், நறு மணம் நிறைந்துள்ள செழுமை கொண்ட பூ மாலையை அணிந்துள்ள மேகம் போல் கறுத்தக் கூந்தலை அவிழ்த்து விடவும், நஞ்சு, தாமரை, அம்பு ஆகியவைகளுக்கு நிகரான கண் கொண்டு (ஆடவர்களை) விரட்டவும், பேச்சு மாற்றிப் பேசவும், மாமிசம் நிரம்பிய நீருடனும் ரத்த நீருடனும் கலந்த உடலுடன் வீட்டின் வெளியில் வந்து நிற்கவும், வேண்டுமென்றே மூடராக உள்ளவரின் எதிர்ப்பட்டு வரவும், அவர்களைப் பின் தொடர்ந்தும், வெற்றிலை, சுண்ணாம்பு, பாக்கு இவைகளை எடுத்துக் கொடுத்து (நீங்கள்) இடையில் அப்படியே நமது வீட்டுக்குத் திரும்பி வாரும், நற்குணத்தவர் அன்றோ என்று சொல்லி நன்மொழி பேசி அவர்களை வீட்டுக்கு வரச் செய்து, தம்முடன் அழைத்துச் சென்று அன்புடன் போய் உறங்கும் படுக்கையின் மேல் ஆடையைத் தளர விடவும், காம மோகத்தை உண்டு பண்ணவும், நயத்துடன் (உபசார வார்த்தைகள் சொல்லி) அங்கிருந்தபடியே கொஞ்சிப் பேசி, அவர்கள் கையிலுள்ள பொருள் அனைத்தையும் பறித்துப் (பொருள் வற்றிய பின்னர்) மிகவும் (வந்தவரிடம்) கோபம் கொண்டு, அச்சமயத்தில் ஏதேனும் ஒரு போலிக் காரணத்தை கற்பித்துக் கொண்டு கலகப் போர் செய்து வந்தவரை அகன்று ஓடும்படி அடித்து அனுப்பிய பின்னர், (அப்படி ஓட்டப் பட்டவர்களால்) வந்த பங்குப் பொருள் சுருங்க ஒரு புதிய ஆடவருடன் பொய்க் கதைகளைச் சொல்லவும் வல்ல சாமர்த்தியசாலிகள். (அத்தகைய விலைமாதர்களின்) குணத்தைக் கண்டும் நிலை கலங்காத மனிதர்களைப் போல சிறு பொழுதேனும் (மனம் பொருந்தி உன்னை) நினைந்தும், (உன்னைத்) தரிசித்து மனம் களித்தும், நறு மணமுள்ள மலர்கள் பொருந்திய உனது திருவடிகளை அணுகிச் சேர்வதற்கு உரிய அறிவு இல்லாதவனாய் மிக்கு எழும் பெரிய பாவியாகிய என்னை ஆண்டு அருள்வாயாக. வில்லால் நன்றாய்த் தன்னை அடிக்கும்படியான மனத்தை (அர்ச்சுனனுக்குக்) கொடுத்தும், மறையோனும் தாமரை மலரில் வீற்றிருப்பவனும் ஆகிய பிரமனுடைய உச்சித் தலையை அரிந்தும், (அந்தத் தலையில்) பலிப் பிச்சை ஏற்றும், திரிபுரங்களில் நெருப்பு எழும்படி சிரித்தும் திருவருள் விளையாடல்களைச் செய்த சிவபெருமானுடைய (இடது) பாகத்தில் இருப்பவளாகிய பார்வதி தேவி அருளிய சிறந்த முருகனே, போர்க் களத்தில் பேய்கள் தெனத்தென தெனந்தெந்தெந் தெனந்தா என்று கூறி, இடக் கையால் கொட்டப்படும் முரசுகளும், மணிகளும், அதம ஒலி எழுப்பும் பறைகளும் டிகுண்டிங்குண் டிகுண்டா டிகுகுடிக்குகு டிகுகுடிக்குகு டிகுண்டிங்குண் டிகுண்டீ இவ்வாறான ஒலிகளை எழுப்ப, ராவணனுடைய பெரிய மலை போல் விளங்கிய பத்துத் தலைகளையும் (இரண்டு ஐந்து = 10+9+1=20) இருபது பெரிய புயங்களையும் ஒரு வழிப்பட்டு ஒழியும்படி கோபித்து ஒப்பற்ற அம்பை எறிந்தவனாகிய ராமனாகிய திருமாலின் பிள்ளையாகிய மன்மதனுக்கு மைத்துன முறையினனே*, அசுரர்களுடைய குடலை வெளிப்படுத்தி, அவர்களுடைய உடலைப் பிளந்து மயிலின் மீது ஏறி வருபவனே, வயல்களில் கயல் மீன் கூட்டங்கள் மிக்கு எழுந்து வரப்பில் புரண்டு பெருகும் பக்கங்களில், சங்குகள் சொரிகின்ற முத்துக்கள் நிறைந்து எங்கும் விளக்கம் தரும் மேம்பாட்டினைப் பெற்று, உயர்ந்த மாடம்பாக்கம் என்னும் அழகிய தலத்தை இடமாகக் கொண்டு இன்புறுகின்ற மேன்மை மிக்க இளமை வாய்ந்த தலைவனே.
* திருமாலின் மகன் மன்மதன். திருமாலின் மகள் சுந்தரவல்லியாகிய வள்ளி. முருகன் வள்ளியின் கணவன் ஆகையால் மன்மதனுக்கு மைத்துனன் முறையினன் ஆகிறான்.
** மாடம்பாக்கம் தாம்பரத்தின் அருகில் வண்டலூருக்கு 7 மைல் கிழக்கில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 702 - மாடம்பாக்கம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்தன, கொண்டு, தந்த, திருமாலின், பேசி, பொருள், தனந்தந், தந்தா, பெரிய, பின்னர், மனம், டிகுண்டிங்குண், மாடம்பாக்கம், மன்மதனுக்கு, டிகுகுடிக்குகு, செய்து, மிக்கு, தாமரை, டிகுகு, குண்டி, டிகுண்டிங், ருடனே, டிக்குகு, மைத்துன, நீருடனும், விடவும், போல், சொல்லி