பாடல் 633 - கழுகுமலை - திருப்புகழ்

ராகம் - ....;
தாளம் -
தனதன தத்தத் தனத்த தானன தனதன தத்தத் தனத்த தானன தனதன தத்தத் தனத்த தானன ...... தனதான |
முலையை மறைத்துத் திறப்ப ராடையை நெகிழ வுடுத்துப் படுப்பர் வாயிதழ் முறைமுறை முத்திக் கொடுப்பர் பூமல ...... ரணைமீதே அலைகுலை யக்கொட் டணைப்ப ராடவர் மனவலி யைத்தட் டழிப்பர் மால்பெரி தவர்பொரு ளைக்கைப் பறிப்பர் வேசைக ...... ளுறவாமோ தலைமுடி பத்துத் தெறித்து ராவண னுடல்தொளை பட்டுத் துடிக்க வேயொரு தநுவைவ ளைத்துத் தொடுத்த வாளியன் ...... மருகோனே கலைமதி யப்புத் தரித்த வேணிய ருதவிய வெற்றித் திருக்கை வேலவ கழுகும லைக்குட் சிறக்க மேவிய ...... பெருமாளே. |
மார்பினை மூடி மூடித் திறப்பார்கள். ஆடையைத் தளர உடுத்துப் படுப்பார்கள். வாயிதழ் ஊறலை மாற்றி மாற்றி முத்தத்தைக் கொடுப்பார்கள். பொலிவுள்ள மலர்ப் படுக்கையின் மேல் (வருபவரை) நிலை குலையக் கொண்டு தழுவுவார்கள். ஆண்களின் மன வலிமையைக் கலங்க வைப்பார்கள். மோக மயக்கம் பெரிதாகத் தந்து கைப்பொருளைப் பறிப்பார்கள். இத்தகைய விலை மகளிரின் நட்பு எனக்கு நல்லதாகுமோ? ராவணனுடைய தலைகள் பத்தையும் சிதறடித்து உடல் தொளைபட்டுத் துடித்திடவே, ஒப்பற்ற வில்லை வளைத்துச் செலுத்திய அம்பை உடையவனாகிய ராமனின் மருகனே, ஒற்றைக் கலையில் நின்ற சந்திரன், நீர் (கங்கை) இவைகளைத் தரித்த சடையை உடைய சிவபெருமான் அளித்த வெற்றி வேலைக் கையில் ஏந்திய வேலனே, கழுகு மலையில்* சிறப்புடன் வீற்றிருக்கும் பெருமாளே.
* கழுகுமலை கோவில்பட்டிக்கு அருகில் ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் வழியில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 633 - கழுகுமலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, தனத்த, தானன, தத்தத், மாற்றி, பெருமாளே, தரித்த, வாயிதழ்