பாடல் 62 - திருச்செந்தூர் - திருப்புகழ்

ராகம் - ஸிம்மேந்திர
மத்யமம் / தந்யாஸி
தாளம் - கண்டசாபு - 2 1/2
தாளம் - கண்டசாபு - 2 1/2
தந்ததன தந்தனந் தந்ததன தந்தனந் தந்ததன தந்தனந் ...... தந்ததானா |
தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந் தண்கழல்சி லம்புடன் ...... கொஞ்சவேநின் தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன் சந்தொடம ணைந்துநின் ...... றன்புபோலக் கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங் கஞ்சமலர் செங்கையுஞ் ...... சிந்துவேலும் கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங் கண்குளிர என்றன்முன் ...... சந்தியாவோ புண்டரிகர் அண்டமுங் கொண்டபகி ரண்டமும் பொங்கியெழ வெங்களங் ...... கொண்டபோது பொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும்வ ளர்ந்துமுன் புண்டரிகர் தந்தையுஞ் ...... சிந்தைகூரக் கொண்டநட னம்பதஞ் செந்திலிலும் என்றன்முன் கொஞ்சிநட னங்கொளுங் ...... கந்தவேளே கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடுங் கும்பமுநி கும்பிடுந் ...... தம்பிரானே. |
தண்டை என்கின்ற காலணி, வெண்டையம் என்ற வீரக் காலணி, கிண்கிணி, (சலங்கை என்னும்) சதங்கையும், அருள் கழல்களும், சிலம்புடன் (எல்லாம் ஒன்றுபட்டுக்) கொஞ்சி ஒலிக்க உன் தந்தை சிவனை அன்புடன் வலம்வந்து நல்ல மகிழ்ச்சி கொண்டு அணைத்து நிலைத்து நின்ற அந்த அன்பு போலவே, (இப்போது நான் உன்னைக்) கண்டு மனம் ஒன்றுபட, கடம்ப மாலையும், அழகிய மணிமுடிகளும், தாமரை மலர் போன்ற சிவந்த கைகளும், சூரனை அழித்த வேலும், பன்னிரு கண்களும், ஆறு திரு முகங்களும், (அவற்றில் தோன்றும்) நிலவொளிகளும், என் கண்கள் குளிரும்படியாக என் முன்புவந்து தோன்ற மாட்டாவோ? தாமரையில் தோன்றியவன் (பிரமன்) உலகமும், அதனை உட்கொண்ட வெளியண்டங்களூம், மகிழ்ச்சி பொங்கி எழ, நீ போர்க்களம் புகுந்த போது, பொன்மலை என்னும்படி அழகு சிறந்து எல்லாத் திசைகளிலும் நிறைந்து நின்று தாமரைக்கண்ணன் திருமாலும், தந்தை சிவனும் மன மகிழ்ச்சி கொள்ளும் படியாக நீ கொண்ட நடனப் பாதங்கள் திருச்செந்தூர் ஆகிய இந்தப் பதியிலும், என்முன் கொஞ்சி நடனம் கொள்ளும் கந்தனாகிய மன்மத சொரூபனே குறமங்கை வள்ளியின் சந்தன மணம் வீசும் மார்பை நுகர்கின்ற தம்பிரானே அகத்திய முனிவர் தொழும் தம்பிரானே.
* முருகன் சூரனை வதைத்தபோது போர்க்களத்தில் விசுவரூபம் கொண்டதையும், அதனை திருமாலும், சிவனும் கண்டு மகிழ்ச்சி கொண்டதையும் குறிக்கும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 62 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - மகிழ்ச்சி, தந்ததன, தம்பிரானே, தந்தனந், கொண்டதையும், திருமாலும், சிவனும், சூரனை, கொள்ளும், தந்தை, என்றன்முன், புண்டரிகர், காலணி, கொஞ்சி, கண்டு