பாடல் 598 - திருச்செங்கோடு - திருப்புகழ்

ராகம் -
சங்கராபரணம் ; தாளம் - திஸ்ர ஏகம் - 3
தான தனத் ...... தனதான |
காலனிடத் ...... தணுகாதே காசினியிற் ...... பிறவாதே சீலஅகத் ...... தியஞான தேனமுதைத் ...... தருவாயே மாலயனுக் ...... கரியானே மாதவரைப் ...... பிரியானே நாலுமறைப் ...... பொருளானே நாககிரிப் ...... பெருமாளே. |
யமனுடைய ஊரை நெருங்காத வகைக்கும், இந்தப் பூமியில் மீண்டும் பிறவாத வகைக்கும், நற்குணம் வாய்ந்த அகத்திய முநிவருக்கு நீ அருளிய ஞானோபதேசம் என்ற தேன் போன்று இனிக்கும் நல்லமிர்தத்தை எனக்கும் தந்தருள்க. திருமாலுக்கும் பிரமனுக்கும் அரியவனே, சிறந்த தவசிரேஷ்டர்களை விட்டுப் பிரியாதவனே, நான்கு வேதங்களின் மறை பொருளாக உள்ளவனே, நாககிரியாகிய திருச்செங்கோட்டில்* எழுந்தருளியுள்ள பெருமாளே.
* திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது.மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 598 - திருச்செங்கோடு - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - என்றும், இருப்பதால், திருச்செங்கோடு, வகைக்கும், பெருமாளே