பாடல் 448 - திருக்காளத்தி - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தந்தன தானத் தனந்த தானன தந்தன தானத் தனந்த தானன தந்தன தானத் தனந்த தானன தனதான |
பங்கய னார்பெற் றிடுஞ்ச ராசர அண்டம தாயுற் றிருந்த பார்மிசை பஞ்சவர் கூடித் திரண்ட தோர்நர ...... உருவாயே பந்தம தாகப் பிணிந்த ஆசையில் இங்கித மாகத் திரிந்து மாதர்கள் பண்பொழி சூதைக் கடந்தி டாதுழல் ...... படிறாயே சங்கட னாகித் தளர்ந்து நோய்வினை வந்துடல் மூடக் கலங்கி டாமதி தந்தடி யேனைப் புரந்தி டாயுன ...... தருளாலே சங்கரர் வாமத் திருந்த நூபுர சுந்தரி யாதித் தருஞ்சு தாபத தண்டைய னேகுக் குடம்ப தாகையின் ...... முருகோனே திங்களு லாவப் பணிந்த வேணியர் பொங்கர வாடப் புனைந்த மார்பினர் திண்சிலை சூலத் தழுந்து பாணியர் ...... நெடிதாழ்வார் சிந்துவி லேயுற் றெழுந்த காளவி டங்கள மீதிற் சிறந்த சோதியர் திண்புய மீதிற் றவழ்ந்து வீறிய ...... குருநாதா சிங்கம தாகத் திரிந்த மால்கெரு வம்பொடி யாகப் பறந்து சீறிய சிம்புள தாகச் சிறந்த காவென ...... வருகோமுன் செங்கதி ரோனைக் கடிந்த தீவினை துஞ்சிட வேநற் றவஞ்செய் தேறிய தென்கயி லாயத் தமர்ந்து வாழ்வருள் ...... பெருமாளே. |
தாமரை மலரில் உள்ள பிரமன் படைத்துள்ள அசைவன, அசையாதனவாய் உள்ள அண்டமாகிப் பொருந்தி இருக்கும் இந்தப் பூமி மேல் ஐம்பூதங்களும் கூடி ஒன்றாகி ஒரு மனித உருவம் அமைந்து, பாசத்தால் கட்டுண்ட ஆசையால் இன்பமுற்றுத் திரிந்து, விலைமாதரின் நற்குணம் இல்லாத வஞ்சகச் சூழ்ச்சிகளைக் கடந்திடாமல் திரிகின்ற, பொய் கலந்தவனாய் வேதனைப் படுபவனாகிச் சோர்வடைந்து, பிணியும் வினையும் வந்து உடலை மூடி, அதனால், கலக்கம் அடையாத அறிவைத் தந்து அடியேனை உன்னுடைய திருவருளைப் பாலித்துக் காப்பாற்றுவாயாக. சிவபெருமானுடைய இடது பாகத்தில் உறையும் சிலம்பணிந்த அழகி ஆதி தேவி பெற்ற குழந்தையே, தண்டைகள் அணிந்த பாதங்களை உடையவனே, கோழிக் கொடியைக் கொண்ட முருகனே, நிலவு (சடையில்) உலாவும்படியாக அருளிய சடையை உடையவர், மேலெழுந்து பாம்பு ஆடும்படி அணிந்துள்ள மார்பை உடையவர், வலிமை வாய்ந்த (பினாகம் என்னும்) வில்லும், சூலாயுதமும் பொருந்தி உள்ள திருக்கையை உடையவர், நிரம்ப ஆழமாகவும் நீண்டும் உள்ள பாற்கடலில் இருந்து தோன்றிய கரிய ஆலகால விஷத்தை தனது கண்டத்தில் விளங்கும்படி வைத்த பேரொளியினர் (நீலகண்டர்), (அத்தகைய சிவபெருமானுடைய) வலிய தோள்களில் தவழ்ந்து பொலிந்த குருநாதனே, நரசிங்கமாக திரிந்த திருமாலின் அகந்தை* பொடிபட்டு அழியும்படியாக, பறந்து கோபித்த சரபப் பட்சியாய் (உரு எடுத்து) விளங்கி ஆகா என்று சப்தித்து வந்த பெருமானாகிய வீரபத்திரர் முன்பு, சூரியனை (தக்ஷயாகத்தின்போது) தண்டித்த தீவினை தோஷம் நீங்க**, நல்ல தவத்தைச் செய்து சிறப்படைந்த தக்ஷிண கயிலாயமாகிய திருக்காளத்தியில் வீற்றிருந்து அடியார்களுக்கு அருளும் பெருமாளே.
* இரணியன் இரத்தத்தை உறிஞ்சிய பின் வெறி ஏறி திருமால் உக்கிரம் கொண்டார். சிவபெருமான் வீரபத்திரரை ஏவ, அவர் சரபப் பட்சி உருவம் எடுத்து அந்த நரசிங்கத்தை அடக்கினார்.** வீரபத்திரர் தக்ஷயாகத்தின்போது சிவனின் அம்சமாகக் கருதப்படும் சூரியனைத் தண்டித்த தீவினை நீங்க திருக்காளத்தியில் தவம் செய்தார் - திருக்காளத்திப் புராணம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 448 - திருக்காளத்தி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - உள்ள, தந்தன, உடையவர், தானன, தனந்த, தீவினை, தானத், சரபப், தக்ஷயாகத்தின்போது, திருக்காளத்தியில், தண்டித்த, சிவபெருமானுடைய, வீரபத்திரர், எடுத்து, பெருமாளே, மீதிற், திரிந்து, சிறந்த, திரிந்த, பொருந்தி, பறந்து, உருவம்