பாடல் 400 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - ஸாவேரி;
தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2
தகிட தகதிமி-3 1/2
தகிட தகதிமி-3 1/2
தனன தனனா தனன தனனா தனன தனனா ...... தனதான |
இருவர் மயலோ அமளி விதமோ எனென செயலோ ...... அணுகாத இருடி அயன்மா லமர ரடியா ரிசையு மொலிதா ...... னிவைகேளா தொருவ னடியே னலறு மொழிதா னொருவர் பரிவாய் ...... மொழிவாரோ உனது பததூள் புவன கிரிதா னுனது கிருபா ...... கரமேதோ பரம குருவா யணுவி லசைவாய் பவன முதலா ...... கியபூதப் படையு முடையாய் சகல வடிவாய் பழைய வடிவா ...... கியவேலா அரியு மயனோ டபய மெனவே அயிலை யிருள்மேல் ...... விடுவோனே அடிமை கொடுநோய் பொடிகள் படவே அருண கிரிவாழ் ...... பெருமாளே. |
வள்ளி, தேவயானை ஆகிய இரு தேவியர் மீது நீ கொண்ட ஆசையோ? அல்லது உன் திருக்கோயில்களில் விதவிதமாக நடக்கும் ஆரவாரங்களோ? வேறு என்னென்ன நிகழ்ச்சிகளோ? (எனக்குத் தெரியாது) உன்னை அணுகமுடியாத முநிவர், பிரமன், மால், தேவர், அடியார் இத்தனை பேரும் முறையிடும் ஒலிகள் என் செவியில் விழாதபோது, யான் ஒருவன் மட்டும் தனியாக இங்கே அலறும் மொழிகளைப் பற்றி யாரேனும் ஒருவர் அன்போடு வந்து உன்னிடம் தெரிவிப்பார்களோ? உன் பாதத்தில் உள்ள தூசானது பூமியிலுள்ள மலைகளுக்குச் சமம். அப்படியென்றால் உன் திருவருள் எவ்வளவு பெரியதோ? (யான் அறியேன்). மேலான குருமூர்த்தியாய், அணுவிலும் அசைவு ஏற்படுத்துபவனாய், காற்று முதலிய ஐம்பெரும் பூதங்களை ஆயுதமாக உடையவனே, எல்லா உருவமாயும், பழமையான உருவத்திலும் அமைந்த வேலனே, திருமாலும், பிரம்மனும் உன்னிடம் அடைக்கலம் புக, உன் வேலாயுதத்தை இருள் வடிவம் எடுத்த சூரன்மேல் செலுத்தியவனே, இவ்வடியேனுக்கு ஏற்பட்ட தொழுநோயைத் தூளாக்கிய* திருவண்ணாமலையில் வாழ்கின்ற பெருமாளே.
* அருணகிரிநாதர் வாழ்க்கையில் அவருக்கு உற்ற தொழுநோயை முருகனது அருள் முற்றிலும் குணப்படுத்திய நிகழ்ச்சி இங்கு பேசப்படுகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 400 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனனா, உன்னிடம், பெருமாளே, யான்