பாடல் 304 - குன்றுதோறாடல் - திருப்புகழ்

ராகம் - பேகடா ;
தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2
தகதிமி-2, தகிட-1 1/2
தகதிமி-2, தகிட-1 1/2
தனதன தனன தனதன தனன தனதன தனன ...... தனதான |
எழுதிகழ் புவன நொடியள வதனி லியல்பெற மயிலில் ...... வருவோனே இமையவர் பரவி யடிதொழ அவுணர் மடிவுற விடுவ ...... தொருவேலா வழுதியர் தமிழி னொருபொரு ளதனை வழிபட மொழியு ...... முருகேசா மலரடி பணியு மடமகள் பசலை மயல்கொடு தளர்வ ...... தழகோதான் முழுகிய புனலி லினமணி தரள முறுகிடு பவள ...... மிகவாரி முறையொடு குறவர் மடமகள் சொரியு முதுமலை யழக ...... குருநாதா பழகிய வினைகள் பொடிபட அருளில் படிபவ ரிதய ...... முறுகோவே பருவரை துணிய வொருகணை தெரிவ பலமலை யுடைய ...... பெருமாளே. |
ஏழு உலகங்கள் எனவிளங்கும் புவனத்தை ஒரு நொடிப் பொழுதினில் அழகு விளங்க மயிலில் வலம் வந்தவனே தேவர்கள் போற்றி உன் திருவடிகளைத் தொழ அசுரர்கள் மடியும்படியாக செலுத்திய ஒப்பற்ற வேலாயுதனே பாண்டிய மன்னர்களால் விருத்தி செய்யப்பட்ட தமிழில் ஒப்பற்ற அகப்பொருள் இலக்கணத்தை வணங்கி வேண்ட விளக்கிய (திருவிளையாடற் புராணத்தில் வரும் உருத்திரசன்மன் [முருக அம்சம்] - கதை) முருகேசனே உன் மலர்ப்பதங்களை வணங்கும் இந்த அறியாமகள் காமத்தால் வரும் பசலை நோய் கொண்டு மோகத்தால் தளர்ந்து போவது (இது தாய் மகளுக்காகச் சொல்வது) நியாயமாகுமா? நீரில் மூழ்கி அதனின்று பல மணிகளும் முத்துக்களும், பின்னிய பவளங்களும் நிரம்ப வாரி விற்கக் கூவும் குறப்பெண்கள் நிறைந்த முதுமலையின் (விருத்தாசலம்) அழகா, குருநாதனே என்னுடன் வந்து பழகிய வினைகள் பொடியாக நின்னருளில் தோய்பவர் இதயத்தில் வீற்றிருக்கும் அரசனே பெருத்த கிரெளஞ்சமலை பிளந்து போகும்படி ஒப்பற்ற ஆயுதத்தை தேர்ந்தெடுத்துச் செலுத்தியவனே பல மலைகளுக்கும் அதிபனான பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 304 - குன்றுதோறாடல் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, ஒப்பற்ற, வரும், பெருமாளே, வினைகள், பழகிய, மயிலில், மடமகள், பசலை