பாடல் 289 - திருத்தணிகை - திருப்புகழ்

ராகம் - ....; தாளம்
- .......
தனத்தன தானம் தனத்தன தானம் தனத்தன தானம் ...... தனதான |
மருக்குல மேவுங் குழற்கனி வாய்வெண் மதிப்பிள வாகும் ...... நுதலார்தம் மயக்கினி லேநண் புறப்படு வேனுன் மலர்க்கழல் பாடுந் ...... திறநாடாத் தருக்கனு தாரந் துணுக்கிலி லோபன் சமத்தறி யாவன் ...... பிலிமூகன் தலத்தினி லேவந் துறப்பணி யாதன் தனக்கினி யார்தஞ் ...... சபைதாராய் குருக்குல ராஜன் தனக்கொரு தூதன் குறட்பெல மாயன் ...... நவநீதங் குறித்தயில் நேயன் திருப்பயில் மார்பன் குணத்ரய நாதன் ...... மருகோனே திருக்குள நாளும் பலத்திசை மூசும் சிறப்பது றாஎண் ...... டிசையோடும் திரைக்கடல் சூழும் புவிக்குயி ராகுந் திருத்தணி மேவும் ...... பெருமாளே. |
வாசனை வகைகள் நிறைந்த கூந்தலையும், கொவ்வைக் கனி போன்ற சிவந்த வாயையும், வெண் பிறையின் பிளவு போன்ற நெற்றியையும் உடைய விலைமாதர்களின் மோக மயக்கத்தில் நட்புப் பூணும் நான் உன்னுடைய மலரடியைப் பாடும் வழி வகையை நாடாத ஆணவம் கொண்டவன், கொடைக் குணம் கொஞ்சமும் இல்லாதவன், (மாறாக) லோப குணம் உடையவன், திறமை இல்லாதவன், அன்பு அற்றவன், ஊமையன், (உனது திருத்தணிகைத்) தலத்துக்கு வந்து மனம் ஒன்றிப் பணியாதவன், இத்தகைய எனக்கு, இனியவரான உன் அடியார்கள் திருக் கூட்டத்தில் சேரும் பேற்றைத் தந்து அருள்வாய். குருகுல அரசனாகிய தருமருக்கு ஒரு தூதனாகச் சென்றவன், (மாவலி சக்கரவர்த்தி இடம்) வாமனனாய் குட்டை வடிவத்தில் சென்றவன், பலத்த மாயைகள் செய்ய வல்லவன், வெண்ணெய் (இருக்கும் இடத்தை) குறித்து அறிந்து உண்ணும் நேசன், லக்ஷ்மி தேவி வாசம் செய்யும் மார்பன், (சத்துவம், ராஜதம், தாமஸம் ஆகிய) முக்குணங்களுக்குத் தலைவனாகிய திருமாலின் மருகனே, குமார தீர்த்தம் என்னும் திருக் குளத்தில்* நாள் தோறும் பல திசைகளில் இருந்து வரும் அடியார்கள் நெருங்கிக் குளிக்கும் சிறப்பைப் பெற்றதும், எட்டுத் திக்குகளிலும் அலைகடல் சூழ்ந்த பூமிக்கு உயிர் நிலையான இடமுமாகிய திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே.
* தணிகை மலை அடிவாரத்தில் சரவணப் பொய்கை உள்ளது. இது குமாரதீர்த்தம் எனவும் பெயர் பெறும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 289 - திருத்தணிகை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்தன, தானம், திருக், சென்றவன், அடியார்கள், குணம், மார்பன், பெருமாளே, இல்லாதவன்