பாடல் 1056 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனன தனன தாத்தன, தனன தனன தாத்தன தனன தனன தாத்தன ...... தனதான |
மகளு மனைவி தாய்க்குல மணையு மனைவர் வாக்கினில் மறுகி புறமு மார்த்திட ...... வுடலூடே மருவு முயிரை நோக்கமு மெரியை யுமிழ ஆர்ப்பவ ருடனு மியமன் மாட்டிட ...... அணுகாமுன் உகமு முடிவு மாச்செலு முதய மதியி னோட்டமு முளது மிலது மாச்சென ...... வுறைவோரும் உருகு முரிமை காட்டிய முருக னெனவு நாக்கொடு உனது கழல்கள் போற்றிட ...... அருள்தாராய் புகல வரிய போர்ச்சிலை விரக விசைய னாற்புக ழுடைய திருத ராட்டிர ...... புதல்வோர்தம் புரவி கரிகள் தேர்ப்படை மடிய அரசை மாய்த்துயர் புவியின் விதன மாற்றினர் ...... மருகோனே மிகவு மலையு மாக்கடல் முழுது மடிய வேற்றுரு வெனவு மருவி வேற்கொடு ...... பொருசூரன் விரைசெய் நெடிய தோட்கன அடலு முருவ வேற்படை விசைய முறவும் வீக்கிய ...... பெருமாளே. |
மகள், மனைவி, தாய், சுற்றத்தார், வந்து கூடும் எல்லாருடைய வாக்கிலும் கலக்கம் உண்டாகி, வெளி ஊராரும் ஐயோ என்று அலறி நிறைந்து கூட, உடலில் பொருந்தியுள்ள உயிரை எடுக்கவென்றே, தனது கண்களும் தீயைக் கக்க, பேரொலி செய்து வரும் தூதர்களுடன், யமன் என்னைச் சிக்க வைப்பதற்காக நெருங்குவதற்கு முன்பாக, (இப்) பூமியில் வாழ்வும் முடிவுறும்படி போய்க் கொண்டிருந்த, தோன்றி வரும் இடை கலையின் (இடது) நாசியால் விடும் சுவாசத்தின் ஓட்டமும் இதோ இருக்கின்றது, இல்லை இதோ முடிவு வந்து விட்டது என்னும்படி சொல்லிக் கொண்டு அருகில் இருப்பவர்களும் தத்தம் உறவு முறைகளைக் காட்டுகிற போது, (அச்சமயத்தில்) நான் முருகா என்று என் நாவைக் கொண்டு உனது திருவடிகளைப் போற்றி செய்ய அருள் புரிவாயாக. சொல்லுவதற்கு முடியாத சிறப்புடைய (காண்டீபம் என்ற) போர் வில்லை உடையவனும், சாமர்த்தியம் உள்ளவனுமாகிய அருச்சுனனைக் கொண்டு, புகழ் பெற்றிருந்த திருதராட்டிரனின் மக்களின் குதிரை, யானை, தேர்கள், காலாட் படைகள் யாவும் இறந்து படச் செய்து, துரியோதனனின் அரசைத் தொலைத்து, சிறந்த இந்தப் பூமியின் துன்பத்தை நீக்கியவரான திருமாலின் மருகனே, மிகப் பெரிய மலை வடிவத்தையும், பெருங் கடல் உருவத்தையும் எடுத்து (எதிர்த்தோர்) யாவரும் இறக்க வெவ்வேறு உருவங்கள் என்னும்படியாக (இந்த உருவங்களை) ஏற்றுப் பொருந்தி வேற் படை ஏந்திச் சண்டை செய்த சூரனின் நறு மணமுள்ள பெரிய தோள்களின் கனத்த வலிமையும் கழிந்து நீங்க, வேலாயுதத்தை வெற்றி பெற வேகமாகச் செலுத்திய பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1056 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தாத்தன, கொண்டு, பெரிய, செய்து, வரும், வந்து, மடிய, மனைவி, முடிவு, உனது, விசைய, பெருமாளே