பாடல் 1022 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தத்த தனதனன தானத் தான தத்த தனதனன தானத் தான தத்த தனதனன தானத் தானத் ...... தனதான |
முத்து மணிபணிக ளாரத் தாலு மொய்த்த மலைமுலைகொ டேவித் தார முற்று மிளைஞருயிர் மோகித் தேகப் ...... பொருமாதர் முற்று மதிமுகமும் வானிற் காரு மொத்த குழல்விழியும் வேய்நற் றோளு முத்தி தகுமெனும்வி னாவிற் பாயற் ...... கிடைமூழ்கிப் புத்தி கரவடமு லாவிச் சால மெத்த மிகஅறிவி லாரைத் தேறி பொற்கை புகழ்பெரிய ராகப் பாடிப் ...... புவியூடே பொய்க்கு ளொழுகியய ராமற் போது மொய்த்த கமலஇரு தாளைப் பூண பொற்பு மியல்புதுமை யாகப் பாடப் ...... புகல்வாயே பத்து முடியுமத னோடத் தோளிர் பத்து மிறையவொரு வாளிக் கேசெய் பச்சை முகில்சதுர வேதத் தோடுற் ...... றயனாரும் பற்ற வரியநட மாடத் தாளில் பத்தி மிகவினிய ஞானப் பாடல் பற்று மரபுநிலை யாகப் பாடித் ...... திரிவோனே மெத்த அலைகடலும் வாய்விட் டோட வெற்றி மயில்மிசைகொ டேகிச் சூரர் மெய்க்கு ளுறஇலகு வேலைப் போகைக் ...... கெறிவோனே வெற்றி மிகுசிலையி னால்மிக் கோர்தம் வித்து விளைபுனமும் வேய்முத் தீனும் வெற்பு முறையுமயில் வேளைக் காரப் ...... பெருமாளே. |
முத்து, ரத்தினம் இவைகளாலான ஆபரணங்களும் மாலைகளும் நெருங்கி உள்ளதும், மலை போன்றதுமான மார்பைக் கொண்டு, கல்வி நிரம்பிய இளைஞர்களின் உயிரைக் காம இச்சையில் செல்லும்படி தாக்கவல்ல விலைமாதர்களின் பூரண சந்திரன் போன்ற முகமும், ஆகாயத்தில் உள்ள கருமேகம் போன்ற கூந்தலும், கண்களும், மூங்கில் போன்ற அழகிய தோள்களும் முக்தி எனத் தகும் என்கின்ற ஆய்ந்த உணர்ச்சியுடன் படுக்கையில் முழுகி, புத்தியில் வஞ்சக எண்ணம் உலவி, மிக மிக அறிவு இல்லாதவர்களைத் தேர்ந்து எடுத்து, அவர்களுடைய கை, பொன் வீசும் கை என்றும், அவர்கள் புகழில் பெரியோர் என்றும் வரும்படி பாடல்களை அமைத்துப் பாடி, இப்பூமியில் இவ்வாறு பொய்யிலேயே பழகி நடந்து சோர்ந்து போகாமல், மலர்கள் நிறைந்த உனது தாமரைத் திருவடி இணைகளை நான் அடைய, பொலிவு பொருந்திய புதிய வகையில் (உன் புகழைப்) பாடும்படி நல்வார்த்தைகளைக் கூறி அருளுக. (ராவணனுடைய) பத்துத் தலைகளும், அவைகளுடன் அந்தத் தோள்கள் இருபதும் பாழ்படும்படி ஒப்பற்ற ஒரு பாணத்தினாலேயே வீழ்த்திய பச்சை நிறத்தன் திருமாலும், நான்கு வேதங்களுடன் திகழும் பிரம தேவனும் பற்றுதற்கு (கண்டு களிக்க) அரிதான, ஊர்த்துவ நடனமாடின அந்தச் சிவபிரானின் திருவடியில் பக்தி ரசம் இனிதாக விளங்கும் ஞானப் பாடல்களை, இப்பூமியில் உள்ளவர்களின் இயல்பான வழக்க முறையில் (தலங்கள் தோறும் சென்று) பாடித் திரிந்த திருஞான சம்பந்தனே, மிகவும் அலைகளை வீசும் கடலும் வாய்விட்டு ஓலமிட்டுப் புரள, வெற்றி மயிலின் மேல் ஏறி (போர்க்களத்துக்குச்) சென்று, சூரனின் உடலுக்குள் பாய, ஒளி வீசும் வேலாயுதத்தைப் புகும்படி செலுத்தியவனே, வெற்றி தரக் கூடிய சிறப்பினைக் கொண்ட விற்போரில் வல்லவர்களாகிய வேடர்களுடைய (தினை) விதைத்து விளையும் வயலிலும் மூங்கில்கள் முத்துக்களைத் தரும் வள்ளிமலையிலும் வாசம் செய்யும் மயிலைப் போன்ற வள்ளியிடம் காவல் காத்த பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1022 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - வெற்றி, தானத், தத்த, தனதனன, வீசும், பெருமாளே, பாடல்களை, சென்று, இப்பூமியில், பாடித், என்றும், பச்சை, மொய்த்த, முத்து, முற்று, மெத்த, பத்து, யாகப், ஞானப்