நற்றிணை - 161. முல்லை

இறையும், அருந் தொழில் முடித்தென, பொறைய, கண் போல் நீலம் சுனைதொறும் மலர, வீ ததர் வேங்கைய வியல் நெடும் புறவின், இம்மென் பறவை ஈண்டு கிளை இரிய, நெடுந் தெரு அன்ன நேர் கொள் நெடு வழி, |
5 |
இளையர் ஏகுவனர் பரிப்ப, வளை எனக் காந்தள் வள் இதழ் கவிகுளம்பு அறுப்ப, தோள் வலி யாப்ப, ஈண்டு நம் வரவினைப் புள் அறிவுறீஇயினகொல்லோ- தௌளிதின் காதல் கெழுமிய நலத்தள், ஏதில் |
10 |
புதல்வற் காட்டிப் பொய்க்கும் திதலை அல்குல் தேம் மொழியாட்கே? |
நம்முடைய அரசனுஞ் செய்தற்கரிய போர்த் தொழிலை முற்றுவித்ததனாலே; மலையிலுள்ள சுனைகள் தோறும் மாதர்கண்போலும் குவளைமலரா நிற்ப; மலருதிர்ந்து பரவுகின்ற வேங்கை மரங்களையுடைய அகன்ற நெடிய காட்டின் கண்ணே; இம்மென ஒலிக்கின்ற வண்டுகளின் நெருங்கிய கூட்டம் இரிந்தோடாநிற்ப; சோணாட்டின்கணுள்ள 'நெடுந்தெரு' என்னும் ஊர்போன்ற அழகு பொருந்திய நெடிய வழியிலே நம்முடைய வீரர் ஆங்காங்குத் தங்கிச் செல்லாநிற்ப; வெண்காந்தளின் வளவிய இதழ்கள் சங்கு உடைந்து கிடந்தாற் போலக் கிடக்குமாறு குதிரையின் கவிந்த குளம்பு மிதித்து அறுக்காநிற்ப; தோள்களிலே வலி பிணித்து நின்றாற் போல மிக நெருங்கி வருகின்ற நம்முடைய வருகையை; நம்பால் ஆசைமிக்க நலத்தையுடையளாய் யாதுமில்லாத வேறொன்றனைத் தன் புதல்வனுக்குக் காட்டிப் பொய்ம்மொழி கூறி ஆற்றுவித்து மகிழாநிற்கும்; தித்தி பரந்த அல்குலையும் இனிய மொழியையுமுடைய நங் காதலிக்கு; நிமித்தங் காட்டும் காக்கையாகிய புள்ளினங்கள் கரைந்து அறியும்படி தெரிவித்தனவோ? இங்ஙனம் மகிழ்ந்திருப்பதற்கு வேறு காரணமில்லையே?
வினை முற்றிப் பெயரும்தலைவன், தேர்ப்பாகன் கேட்ப, சொல்லியது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 161. முல்லை, இலக்கியங்கள், நம்முடைய, நற்றிணை, முல்லை, நெடிய, எட்டுத்தொகை, காட்டிப், ஈண்டு, சங்க