குறுந்தொகை - 378. பாலை - செவிலி கூற்று
(தலைவனுடன் தலைவி சென்றதை அறிந்த செவிலித்தாய், “என்மகள் போனவழி இன்பத்தைத் தருவதாக அமைக” என்று தெய்வத்தை வாழ்த்தியது).
ஞாயிறு காயாது மரநிழற் பட்டு மலைமுதற் சிறுநெறி மணன்மிகத் தாஅய்த் தண்மழை தலையின் றாக நந்நீத்துச் சுடர்வாய் நெடுவேற் காளையொடு மடமா அரிவை போகிய சுரனே. |
5 |
- கயமனார். |
நம்மைப் பிரிந்து ஒளி பொருந்திய நெடிய வேலையுடைய தலைவனோடு மடப்பத்தையும் மாமையையும் உடைய தலைவி சென்றபாலைநிலம் சூரியன் வெயில் வீசாமல் மரத்தின் நிழல் பொருந்தி மலையினிடத்தேயுள்ள சிறிய வழியின்கண் மணல் மிகப் பரவப்பெற்று குளிர்ந்த மழை பெய்ததாகுக.
முடிபு: சுரன் காயாது நிழற்பட்டுத் தாஅய்த் தலையின்றாக.
கருத்து: தலைவி சென்ற பாலைநிலம் இனியதாகுக.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 378. பாலை - செவிலி கூற்று, இலக்கியங்கள், தலைவி, பாலை, குறுந்தொகை, செவிலி, கூற்று, தாஅய்த், காயாது, எட்டுத்தொகை, சங்க