குறுந்தொகை - 141. குறிஞ்சி - தலைவி கூற்று
(இராக்காலத்தே வந்து ஒழுகா நின்ற தலைவன் கேட்கும் அண்மையனாக, அவன் வரும் வழியினது ஏதத்தை அஞ்சிய தலைவி தோழியை நோக்கி ‘நீ தலைவரிடம், இனி இரவில் வாரற்க; எம் தாய் எம்மைத் தினைப்புனங்காக்கும்படி கூறியுள்ளாள்; ஆதலின் அங்கே வருகவென்று உணர்த்தின் என்ன குற்றம் உளதாகும்?” என்று கூறியது.)
வளைவாய்ச் சிறுகிளி விளைதினைக் கடீஇயர் செல்கென் றோளே அன்னை எனநீ சொல்லின் எவனோ தோழி கொல்லை நெடுங்கை வன்மான் கடும்பகை யுழந்த குறுங்கை யிரும்புலிக் கொலைவல் ஏற்றை |
5 |
பைங்கட் செந்நாய் படுபதம் பார்க்கும் ஆரிரு ணடுநாள் வருதி சாரல் நாட வாரலோ எனவே. |
|
- மதுரைப் பெருங்கொல்லனார். |
தோழி! மலைப்பக்கத்தையுடைய நாட கொல்லையிலுள்ள நெடிய கையையுடைய யானையினது கடிய பகையினால் வருந்திய குறிய கையையுடைய கொல்லுதல் வல்ல பெரிய ஆண்புலியானது பசிய கண்ணையுடைய செந்நாய் அகப்படுகின்ற செவ்வியைப் பார்த்திருக்கும் வருதற்கரிய இருளையுடைய நடுயாமத்தில் வருகின்றாய்; அங்ஙனம் வரு தலை ஒழிவாயாக எனவும் வளைந்த அலகையுடைய சிறு கிளிகளை விளைந்த தினையினிடத்துப் படாமற் கடியும் பொருட்டு நம் தாய் செல்வீராக என்றாள் எனவும் நீ தலைவனுக்குக் கூறின் வரும் குற்றம் யாது?
முடிபு: தோழி, ‘சாரனாட, நடுநாள் வருதி; வாரல்’ எனவும், ‘அன்னை செல்கென்றோள்’ எனவும் சொல்லின் எவன்?
கருத்து: தலைவரை இனிப் பகற்குறிக்கண் வரும்படி நீ சொல்ல வேண்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 141. குறிஞ்சி - தலைவி கூற்று, இலக்கியங்கள், எனவும், தலைவி, குறிஞ்சி, கூற்று, தோழி, குறுந்தொகை, செந்நாய், கையையுடைய, வருதி, வரும், எட்டுத்தொகை, சங்க, தாய், குற்றம், சொல்லின்